- pரியமான அம்மாவிற்கு,
வெகு நாட்களாக உனக்கு எழுத வேண்டும் என நினைத்து நான் எழுதாமல் போன கடிதம் இது..
நான் மகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறேன்
என்பதை நான் எனக்கு தெரிந்த எல்லா வழிகளிலும்
உன்னிடம் சொல்லியும் நீ அதைக் கேட்கவே இல்லை.
என் மீதான உன் நினைவுகள் என் மகிழ்வை, என் அமைதியை நீ கேட்க முடியாத ஒரு அடர் கானகத்தில்
உன்னைக் கட்டிப் போட்டிருக்கிறது.
அந்தக் கானகத்தை விட்டு நீ எவ்வாறவது
வெளியில் வந்து விடவேண்டும் என்பதே என் கோரிக்கையும் பிரார்த்தனையும்.
மரணம் என்பது பூரண விடுதலை என்பது உனக்குத் தெரியும் அம்மா, நீ என்
பொருட்டு கடவுளிடமும்
சக உலகத்தாரிடமும் வருத்தத்துடனும் கோபத்துடனும் இருப்பது எனக்குத் துளியும் பிடிக்கவில்லை. எனக்கு பிடிக்காத ஒன்றை நீ எப்படி செய்யலாம் அம்மா? நீ அழுவது எனக்குப் பிடிக்காது.
நீ வருத்தமாய் இருப்பது என்க்குப் பிடிக்காது.
நீ கோபமாய் இருப்பது எனக்குப் பிடிக்காது.
நீ எதிலும் ஈடுபடாமல் இருப்பது எனக்குப் பிடிக்காது.
இவையெல்லாம் தெரிந்திருந்தும் நீ ஏன் எனக்குப்
பிடிக்காததை செய்தாய் அம்மா?
எனக்குப் பிடிக்காததை செய்வாயா அம்மா..
இனி ஒரு போதும் செய்யமாட்டாய் என என்னை மனதில் நிறுத்தி எனக்கு சத்தியம் சொல்,
நம் வீட்டிற்கு அருகிலோ அல்லது எங்காவதோ இருக்கும் மரத்தை எனக்காக ஒரு முறை ஒரு பத்து நிமிடம் நின்று பார். ஒரு இலை அதன் கிளையில் இருந்து மெல்ல நழுவி பூமியை வந்தடையும் அதன் அந்த இறுதிப் பயணத்தைப் பார். அது விழும் தரையில் ஏற்கனவே விழுந்த இலைகள் பழுப்பு நிறங்களில் கிடப்பதைப் பார், அதன் தாய் மரம் அவற்றின் மீது வெயிலும் மழையும் படாமல் பாதுகாக்க மேலும் இலைகளை பிரசவித்துக் கொண்டே இருப்பதைப் பார்.
மரம் இறந்த இலைகளின் மகிழ்விற்காக மீண்டும் மீண்டும் பிரசவித்துக் கொண்டேதான் இருக்கிறது அம்மா. விழுந்த இலைகளுக்காய் அவை விழுவதில்லை அம்மா. அந்த மரம் தான் ஒரு தாயின் சின்னம்.
நான் உன்னோடு இருக்கும் வரை நீதான் உலகத்தின் சிறந்த தாய் என நான் நினைத்தேன், அதுதான் உண்மையும் கூட. நான் கேட்டதை விட கேட்காததையும் சேர்த்து எனக்குத் தந்தாய். எல்லாமும்மாய் இருந்தாய். ஆனால் நான் போனபின் நீ என் அம்மாவாய் நல்ல அம்மாவாய் இல்லை. நீ என் நினைவுகளால் உன்னை மட்டும் வருத்திக் கொள்ள வில்லை, என்னையும் சேர்த்துத்தான்.
இன்றிலிருந்து இந்த நொடியில் இருந்து நீ அந்த மரம் போல் என்னை மகிழ்வி அம்மா,, முன்பைப் போல் என் அம்மாவாய் இரு அம்மா. அழக்கூடாது, வருத்தப்படக்கூடாது, சிரிக்க வேண்டும், உனக்குப் பிடித்ததை ஒவ்வொரு நொடியும் செய்ய வேண்டும்.
செய்வாய் தானே அம்மா.
உன் மகள் கேட்கிறேன்.
உன் செல்ல மகள் கேட்கிறேன்
உன் பிரிய மகள் கேட்கிறேன்
எனக்காக செய் அம்மா.
நான் மகிழ்வாய் இருப்பதற்காய் செய் அம்மா.
அப்படி செய்தால் தான் நீ என் அம்மா..
பிரியமுடன்
பிரதீபா சான்ட்ரா
Tuesday, March 13, 2012
a letter fro my darling daughter
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment